search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலாப்பட்டு ஜோசப் கொலை"

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் காலாப்பட்டு ஜோசப் கொலை வழக்கில் கைதானவர்கள், நாங்கள் கொலை செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருவதால் போலீசார் செய்வதறியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
    சேதராப்பட்டு:

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் காலாப்பட்டு ஜோசப் (வயது 43). நேற்று முன்தினம் பெரியமுதலியார் சாவடி அருகே வந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    அவரது தம்பி ராஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் காலாப்பட்டை சேர்ந்த சந்திரசேகர், செல்வகுமார், பார்த்திபன், பிள்ளைச் சாவடியை சேர்ந்த விஸ்வநாதன், முகுந்தராஜ், குமரேசன், ஆனந்தன் ஆகியோர் மீது ஆரோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

    தொழில்போட்டி காரணமாக ஜோசப்பை அவர்கள் கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கொலையாளிகளில் பார்த்திபன், குமரேசன், ஆனந்தன் ஆகியோரை போலீசார் அன்று இரவே கைது செய்தனர்.

    நேற்று முதல் குற்றவாளியான சந்திரசேகர் மற்றும் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சந்திரசேகர் காங்கிரஸ் பிரமுகராவார். செல்வகுமார் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்.

    இந்த நிலையில் இன்று காலாப்பட்டை சேர்ந்த மூர்த்தி, சண்முகம் ஆகியோரையும், மேலும் பலரையும் அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கைதான அனைவரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரடியாக அவர்களிடம் நேற்று இரவு விடிய, விடிய விசாரணை நடத்தினார். அதன்பிறகு இன்று காலையிலும் அவர்களிடம் ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.

    அப்போது ஜோசப் குடும்பத்தினரையும் அங்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கைதானவர்கள் இதுவரை நாங்கள் தான் ஜோசப்பை கொன்றோம் என்று சொல்லவில்லை.

    அவரை கொன்றவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது என்று திரும்ப, திரும்ப சொல்கிறார்கள். ஜோசப் எங்களுக்கு எதிரி தான், ஆனாலும் அவரை நாங்கள் கொல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.

    கொலை நடந்த அன்று காலை சந்திரசேகர் தரப்பினர் அனுமந்தையில் கூடி பேசி இருக்கிறார்கள். இதுபற்றிய தகவல் போலீசுக்கு தெரிந்தது. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரித்தனர். அதற்கு சந்திரசேகர் தரப்பினர் இதுபோன்று நாங்கள் அடிக்கடி கூட்டம் நடத்துவது வழக்கம்.

    அப்போது ஜோசப்பால் ஏற்படும் தொல்லை குறித்து நாங்கள் பேசியது உண்மை. ஆனால் நாங்கள் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டவில்லை என்றும் போலீசாரிடம் கூறினார்கள்.

    நாங்கள் கொலை செய்யவில்லை என்று அவர்கள் சொல்வதால் போலீசார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வேறுயாராவது கொலையாளிகளாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

    இவர்கள் தான் கொலை செய்துவிட்டு அதை மறைக்க முயற்சிக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். எனவே தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    ஜோசப் கொலையில் மேலும் பல பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே அவர்கள் யார் என்று கண்டறிய தனியாக விசாரணை நடக்கிறது. இதில் அரசியல் பிரமுகர்கள் கூட இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

    ஜோசப் மோட்டார் சைக்கிளில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேரில் ஒருவர் ஜோசப்பை வெட்டி இருக்கிறார். ஒரே வெட்டில் கொலை செய்துவிட்டு சென்றுவிட்டார்.

    தற்போது கைதானவர்கள் இதுவரை கொலையை ஒத்துக்கொள்ளாததால் அந்த 2 நபரும் யார்? என்று கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

    புதுவை மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த குற்றவாளிகள் கொலை செய்யும் ஸ்டைல் வேறுமாதிரி இருக்கும். கூட்டாக சென்று தாக்குவது, வெடிகுண்டு வீசுவது, எதிரியை நிலைகுலைய செய்து கொல்வது இப்படித் தான் அவர்கள் கொலையை அரங்கேற்றுவார்கள். ஆனால் மோட்டார் சைக்கிளில் செல்லும்போதே வெட்டுவது வித்தியாசமான ஸ்டைலாக இருக்கிறது.

    எனவே இதுபோன்ற கொலைகளில் ஈடுபடுபவர்கள் யார்? எந்த பகுதியில் இந்த நபர்கள் செயல்படுகிறார்கள் என்று விசாரித்து வருகிறார்கள்.

    கொலை நடப்பதற்கு முந்தைய நாள் ஜோசப் காலாப்பட்டில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார். அப்போது அதில் பேசிய ஜோசப் தன்னை கொலை செய்வதற்கு முயற்சி நடக்கிறது. இதற்காக ரூ.50 லட்சம் வரை கூலிப்படையிடம் பேரம் பேசுகிறார்கள் எனறு தெரிவித்து இருக்கிறார்.

    அவர் யாரை குறிப்பிட்டு அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. எனவே ஜோசப்பின் நெருங்கிய நண்பர்களிடம் போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். ஒருவேளை தற்போது கைதானவர்கள் கொலையாளிகளாக இல்லாமல் இருந்தால் உண்மை குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசுக்கு பெரும் சிரமம் ஏற்படலாம்.

    ஆனால் கைதான நபர்கள் தான் குற்றவாளிகளாக இருக்க வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக இருக்கிறார்கள். உரிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடும் என கருதும் போலீசார் விசாரணை முறையை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் காலாப்பட்டு ஜோசப்பை பட்டப்பகலில் 2 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் காலாப்பட்டு ஜோசப் (வயது 46). காலாப்பட்டு முருகன் கோவில் தெருவில் வசித்து வந்தார்.

    அமைச்சர் ஷாஜகானின் தீவிர ஆதரவாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

    இன்று பகல் 12.30 மணியளவில் ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக புதுவைக்கு வந்து கொண்டிருந்தார். பொம்மையார் பாளையத்தை தாண்டி ஆரோ பீச் அருகே வந்த போது மறைந்து இருந்த 2 பேர் திடீரென ஜோசப்பை வழிமறித்தனர்.

    அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு முயன்றார். அதற்குள் சுற்றி வளைத்த அவர்கள் ஜோசப்பை சரமாரியாக வெட்டினார்கள். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். ஜோசப் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதியாகும். கோட்டக்குப்பம் போலீசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து சென்று ஜோசப்பை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஜோசப் புதுவை காங்கிரசில் மிக முக்கிய பிரமுகராவார். அவர் கொலையால் புதுவையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலாப்பட்டு பகுதியில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரை வெட்டியவர்கள் யார்? என்று தெரியவில்லை. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை.

    அவரை வெட்டியது 2 பேர் என்று தெரிந்தாலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஜோசப் புதுவைக்கு வந்ததை கண்காணித்து தகவல் சொன்னதன் அடிப்படையில் காத்திருந்து கொலை செய்துள்ளனர்.

    எனவே மேலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஜோசப் எப்போதுமே தனியாகத்தான் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதை எதிர்பார்த்து காத்திருந்து கொலை செய்து இருக்கிறார்கள்..

    கொலையுண்ட ஜோசப்புக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஜோசப் தனியார் தொழிற்சாலைகளில் காண்டிராக்ட் எடுத்து பணிகள் செய்து வந்தார். மேலும் பாலமுருகன் கோவில் அறங்காவலர் குழுவில் நிர்வாகியாகவும் இருந்தார்.
    ×